/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை மர்ம மரணம்; வாயில் ரத்தம் காணப்பட்டதால் தீவிர விசாரணை
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை மர்ம மரணம்; வாயில் ரத்தம் காணப்பட்டதால் தீவிர விசாரணை
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை மர்ம மரணம்; வாயில் ரத்தம் காணப்பட்டதால் தீவிர விசாரணை
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை மர்ம மரணம்; வாயில் ரத்தம் காணப்பட்டதால் தீவிர விசாரணை
ADDED : ஆக 14, 2024 08:50 PM

கூடலுார்: கூடலுார் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில், வாயில் ரத்தம் வெளி வந்த நிலையில், சிறுத்தை பலியாகி கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கூடலுார் மங்குழி பகுதியில், ஆண்டி என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இவரின் மகன் அருண்குமார் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு பணி முடித்துவிட்டு தேயிலை தோட்டத்தில் உள்ள நடைபாதை வழியாக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது, நடைபாதையில் சிறுத்தை படுத்து கிடப்பதை பார்த்து அலறி அடித்து ஓடி உள்ளார்.
வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்த போது, தேயிலை தோட்ட நடைபாதையில் சிறுத்தை உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.
கூடலுார் உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி நேற்று, காலை சிறுத்தை உடலை ஆய்வு செய்தனர். அப்போது, வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் பெண் சிறுத்தை இறந்து கிடப்பது தெரிய வந்தது.
அதன் உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், நெலாக்கோட்டை அரசு கால்நடை டாக்டர் கவிநயா, 'பிரகதி' அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுகுமாரன் பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் சிறுத்தைக்கு, 7 வயது இருக்கும். உடலில் காயங்கள் ஏதுமில்லை. சில உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ரசாயன பரிசோதனைக்காக, அதன் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின்பே, சிறுத்தை உயிரிழந்ததுக்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,' சிறுத்தை காண்பதற்கு ஆரோக்கியமாக உள்ளது. பொது மக்கள் நடமாடும் பகுதியில் வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் இறந்து கிடப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
சிறுத்தை விஷம் கலந்த இறைச்சியை உட்கொண்டாலும், ரத்தம் கக்கி பலியாக வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்,' என்றனர்.