/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவை மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க கை கொடுத்த நீலகிரி அப்பர்பவானி, எமரால்டிலிருந்து தண்ணீர் திறப்பு
/
கோவை மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க கை கொடுத்த நீலகிரி அப்பர்பவானி, எமரால்டிலிருந்து தண்ணீர் திறப்பு
கோவை மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க கை கொடுத்த நீலகிரி அப்பர்பவானி, எமரால்டிலிருந்து தண்ணீர் திறப்பு
கோவை மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க கை கொடுத்த நீலகிரி அப்பர்பவானி, எமரால்டிலிருந்து தண்ணீர் திறப்பு
ADDED : மே 04, 2024 01:48 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், 13 அணைகள், 12 மின்நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும், 833.65 மெகா வாட் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
பருவமழை சமயத்தில் இங்குள்ள அணைகளின் உபரிநீர் குந்தா வட்டத்திற்கு பில்லுார், மேட்டுப்பாளையம் வழியாகவும், பைக்காரா மின் வட்டத்திற்கு மாயார், தெங்குமரஹாடா வழியாகவும் பவானி அணைக்கு செல்கிறது. இதனால், சமவெளி பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கு இந்த நீர் பயன்படுகிறது.
அதிகாரிகள் குழு ஆய்வு
இதை தவிர, கோவை மாவட்டத்திற்கு பில்லுார் மற்றும் சிறுவாணி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், 70 சதவீதம் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது, கோவையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனை போக்க, கடந்த இரண்டு நாட்களாக அப்பர்பாவனியில் குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசின் உத்தரவுப்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திக்கேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியியல் இயக்குனர் நடராஜன், மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன், நிர்வாக பொறியாளர் செல்வகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமை பொறியாளர் செல்லமுத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று, அப்பர்பவானி, போர்த்தி மந்து அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்தனர்.
டனல் வழியாக தண்ணீர்
மின் வாரிய அதிகாரிகள் பேச்சுக்கு பின், அப்பர்பவானி, போர்த்தி மந்து அணைகளிலிருந்து, 'டனல்' வழியாக பில்லுாருக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 210 அடி கொண்ட அப்பர்பவானியில் இருந்து அத்திக்கடவு வழியாக பில்லுாருக்கு நேற்றும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல், 130 அடி கொண்ட போர்த்தி மந்து அணையில் இருந்து, எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
பின், எமரால்டிலிருந்து குந்தா, கெத்தை, பரளி ஆகிய மின்நிலையங்களின் டனல் வழியாக பில்லுாருக்கு தண்ணீர் சென்றது. மூன்று நாட்களில் மட்டும் வினாடிக்கு, 1,700 கன அடி தண்ணீர் சென்றுள்ளது. அங்குள்ள ராட்சத தொட்டியில் சேமிக்கப்பட்டு கோவைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.