/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடயங்களுக்கு உயிர் அளித்த போலீஸ் டாக்டர் ஓய்வு
/
தடயங்களுக்கு உயிர் அளித்த போலீஸ் டாக்டர் ஓய்வு
ADDED : மே 28, 2024 11:53 PM

பாலக்காடு;கேரள மாநிலத்தில், கடந்த, 24 ஆண்டுகளில், பிரேத பரிசோதனை தடயங்களுக்கு உயிர் அளித்த மருத்துவர் குஜரால் ஓய்வு பெறுகிறார்.
கேரள மாநில போலீஸ் தடயவியல் துறையில் தலைமை ஆலோசகர், பாலக்காடு மாவட்ட போலீஸ் அறுவை சிகிச்சை மருத்துவராக இருப்பவர் குஜரால்.
எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இவர், கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரியில் எம்.டி., பட்டம் பெற்றார். இவர், 2000ம் ஆண்டில் பாலக்காட்டில் போலீஸ் அறுவைச் சிகிச்சை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு, 540 பிரேத பரிசோதனை செய்து சாதனை புரிந்தார். தொடர்ந்து, 24 ஆண்டுகளாக பிணவறையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் மட்டும், 114 பிரேத பரிசோதனைகள் செய்துள்ளார். அந்த அறிக்கையும் சான்றிதழ்களும், ஏப்., 30ம் தேதிக்குள் தயார் செய்தனர். 'சாதாரண மரணம் அல்லது தற்கொலை,' என கூறி கோப்பு மூடப்படும் நுாற்றுக்கு மேலான சம்பவங்களில், கொலை என நிரூபிக்க அவரின் அனுபவம் வாய்ந்த மருத்துவ நுணுக்கங்கள் வழி வகுத்துள்ளன.
மாநிலத்தின் மருத்துவ சட்ட பரிசோதனைகளின் ஒரு விரிவான மருத்துவ குறியீடு தயாரித்த இவர், பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள்; கைதானவர்களின் மருத்துவ சட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் வழிகாட்டுதல்கள் தயாரித்து உள்ளார்.
2011ல் தடயவியல் துறை தலைமை ஆலோசகராக பணியமர்த்தப்பட்ட இவர் வரும், 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
போலீசார் கூறுகையில், 'சுமார் 10,000 பிரேத பரிசோதனைகள், 5,000-க்கும் மேலான வழக்குகளின் சாட்சி அறிக்கை, ஆயிரக்கணக்கான மருத்துவ சட்ட பரிசோதனை, போலீஸ் நுணுக்க விசாரணைக்கு துணையாக இருந்த டாக்டர் ஓய்வு பெறுகிறார். அவர், ஓய்வு பெற்றாலும் போலீஸ் துறையின் புலன் விசாரணைக்கு என்றும் துணை இருப்பார்,' என்றனர்.