/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல்லாங்குழி போல மாறிய சாலை: தடுமாறும் வாகனங்கள்
/
பல்லாங்குழி போல மாறிய சாலை: தடுமாறும் வாகனங்கள்
ADDED : செப் 02, 2024 02:28 AM

பந்தலுார்;-பந்தலுார் அருகே, புஞ்சைவயல் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் இருந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக புஞ்சைவயல், நெல்லியாளம் டான்டீ, கொளப்பள்ளி, அய்யன் கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்து உள்ளது.
இந்த வழியாக அரசு பஸ் வசதி இல்லாத நிலையில், இப்பகுதி மக்கள் ஆட்டோவை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த சாலை முழுவதும் பெயர்ந்து பல்லாங்குழி போல மாறி உள்ளது.
சாலை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரும் இடிந்து விழுந்ததால், வாகனங்கள் செல்லும்போது பாதிப்புகள் ஏற்படுகிறது. தடுப்பு சுவர் இடிந்து விழுந்து பல மாதங்கள் கடந்தும், அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்ய கூட இப்பகுதிக்கு வரவில்லை.
சாலை பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், ஆட்டோ போன்ற வாகனங்கள் கிராமப்புற பகுதிகளுக்கு வர மறுப்பதால், கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் சூழ்ந்து உள்ளதுடன், சிறுத்தைகள் அதிகளவில் நடமாடி வருவதால், பள்ளிக்கூடம் செல்லும் சிறுவயது மாணவர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் வர முடியாத நிலையில் உள்ளது.
எனவே, பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கவும், உடைந்த தடுப்பு சுவரை மீண்டும் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.