/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோலையில் பட்டியல் வகை மரங்கள் வெட்டி கடத்தல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி
/
சோலையில் பட்டியல் வகை மரங்கள் வெட்டி கடத்தல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி
சோலையில் பட்டியல் வகை மரங்கள் வெட்டி கடத்தல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி
சோலையில் பட்டியல் வகை மரங்கள் வெட்டி கடத்தல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி
ADDED : ஜூன் 24, 2024 12:11 AM

பந்தலுார்:'பந்தலுார் அருகே கரிய சோலை வனப்பகுதியில், மின் கம்பிகள் செல்லும் வழித்தடத்தில் பட்டியல் வகை மரங்களை வெட்டி கடத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், மின் கடத்தி செல்லும் கம்பிகள் வனப்பகுதிகள் மற்றும் தோட்டப்பகுதி வழியாக செல்கிறது. அதில், தோட்டங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகளுக்கு அடியில் உள்ள மர கிளைகளை, தோட்ட உரிமையாளர்கள் வெட்டி சீரமைக்கின்றனர்.
வனப்பகுதி வழியாக செல்லும் டவர் லைன் மற்றும் மும்முனை சந்திப்பு மின் கம்பிகளின் அடியில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி, சீரமைப்பதற்கு ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திற்கும், 2 லட்சம் ரூபாய் முதல் அந்தந்த பகுதி பணிகளுக்கு ஏற்றவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தனியார் ஊழியர்களை வைத்து மேற்கொண்டு சம்பளம் வழங்க வேண்டும். பணிகளுக்கு முன்பு, வனத்துறை அனுமதி பெற்று வனத்துறையினர் முன்னிலையில் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டியது அவசியம்.
கிளைக்கு பதில் வெட்டப்பட்ட மரங்கள்
இந்நிலையில், பந்தலுார் மின்வாரிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட, கரியசோலை வனப்பகுதி வழியாக செல்லும்'டவர்' லைன், மின் கம்பிகளுக்கு அடியில் மர கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு பதில், சில பணியாளர்கள் மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தி உள்ளனர்.
அதில், பாதுகாக்கப்பட்ட மர பட்டியலில் உள்ள, ஈட்டி, வெண் தேக்கு உள்ளிட்ட பல்வேறு பட்டியல் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெட்டி சாய்க்கப்பட்ட மரத்துண்டுகள் தற்போது அந்த பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் மாவட்ட கலெக்டருக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளனர்.
நேரடி ஆய்வுக்கு நடவடிக்கை
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில்,''சம்பவம் குறித்து எந்த புகாரும் இதுவரை வரவில்லை. எனினும், வனத்துறை; வருவாய் துறை இணைந்து அந்த பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விதி மீறல் நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, தொடர்பை இருமுறை துண்டித்துவிட்டார்.