/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்வையாளர்களை கவர்ந்த 'பெண்தாடியரங்கு' கதகளி
/
பார்வையாளர்களை கவர்ந்த 'பெண்தாடியரங்கு' கதகளி
ADDED : மே 21, 2024 12:09 AM

பாலக்காடு;கதகளி நடன பயிற்சி மையத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த 'பெண்தாடியரங்கு' என்ற கதகளி நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்லேகுளங்கரை ஏமூர் பகவதி அம்மன் கோவில் அருகே, கதகளி நடன பயிற்சி மையம் உள்ளது.
இந்த மையத்தின், 21ம் ஆண்டு விழாவும், மறைந்த பத்மபூஷன் விருது பெற்ற கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் பிறந்தநாள் விழாவும், நேற்று முன்தினம் பாலக்காடு செம்பை சங்கீதக் கல்லூரி கலையரங்கில் துவங்கியது.
இரு நாட்கள் நடக்கும் இந்த விழாவை, முன்னாள் அமைச்சர் பேபி துவக்கி வைத்தார். மலம்புழா தொகுதி எம்.எல்.ஏ., பிரபாகரன் தலைமை வதித்தார்.
விழாவில், பயிற்சி மைய ஆசிரியர் வெங்கிட்டராமன் தலைமையில் நூற்றுக்கும் மேலான கலைஞர்களின் கதகளி நடன நிகழ்ச்சி நடந்தது.
நேற்று 'ராவணோத்பவம்' என்ற புராண கதையை மையமாகக் கொண்டு கதகளி நடனம் நடந்தது. இதில் 'பெண்தாடியரங்கு' என்ற பெயரில் நடன நிகழ்வும் நடந்தது. இதில், பெண் கலைஞர்கள், தாடி வேடம் அணிந்து நடனம் ஆடினர்.
மாலி, சுமாலி, மால்லியவான் என்ற மூன்று சிவப்பு தாடி கதாபாத்திரங்களின் அறிமுகத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மால்லியவானாக ரஞ்சினியும், சுமாலியாக அமேயாவும், மாலியாக மஞ்சிமாவும் கதகளி நடனம் ஆடினர்.
நடனத்தில், 'வடக்கு ராஜசூயம்' என்ற பகுதியில் சரண்யா சிவந்த தாடி வேடத்தில் (ஜராசந்தன்) அரங்கில் ஏறினார். 'நளசரிதம்' பகுதியில் கலியை (கருப்பு தாடி) பிரியா நடனமாடி அறிமுகப்படுத்தினார்.
'பாலி வத' கதையில் பாலியாக பார்வதியும் 'சுக்ரீவன்' ஆக விஸ்மயாவும் 'தட்சையாகத்தில்' வீரபத்திரனாக மஞ்சிமாவும் வேடமிட்டு நடனமாடினர். இந்த கதகளி நடன ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது.
பொதுவாக இந்த வேடம் அணிந்து ஆண்களே நடனமாடுவர். முதல்முறையாக பெண்கள் இந்த தாடி வேடங்களை அணிந்து நடனம் ஆடி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

