ADDED : ஜூலை 06, 2024 01:52 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் காந்தி மைதானம், நெல்லித்துறை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள்உள்ளன.
இந்த மண்டிகளுக்கு குஜராத், இந்துார், ஆக்ரா, உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கூடலுார், திம்பம், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு, கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் லாரிகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. மாலத்தீவுக்கும், இலங்கைக்கும் துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு வரும் உருளைக்கிழங்குகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் விலை உயர்ந்து உருளைக்கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு, குஜராத்தில் இருந்து தினமும் 15 முதல் 20 லோடுகள் வரையிலும், ஆக்ராவில் இருந்து 5 முதல் 8 லோடுகள் வரையிலும், கோலாரில் இருந்து 6 லோடுகள் வரையிலும் உருளைக்கிழங்குகள் வருகின்றன.
கடந்த வருடம் 30 முதல் 40 லோடு வந்த நிலையில் தற்போது பாதி தான் வருகிறது. வடமாநிலங்களில் உருளைக்கிழங்குகள் பதுக்கி வைக்கப்படுகின்றன. வரத்து குறைவால், உருளைக் கிழங்குகள் விலைதொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, 45 கிலோ எடை கொண்ட குஜராத் கிழங்குகள் ரூ.1,500 முதல் ரூ.1,950 வரையும், கோலார் கிழங்குகள் ரூ.1,700 முதல் ரூ.2,000 வரையும், ஆக்ரா கிழங்குகள், ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி கிழங்கின் விலை ரூ.2,500 முதல் ரூ.3,300 வரை விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுகுறித்து சில்லறை வியாபாரிகள் கூறுகையில், ''சில்லறை விற்பனையில் உருளைக்கிழங்குகளின் விலை கிலோ ஒன்று ரூ.40 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
விலை உயர்வால், ஒரு கிலோ வாங்க நினைக்கும் மக்கள், அரை கிலோ, கால் கிலோ என வாங்கி செல்கின்றனர்,'' என்றனர்.