/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகள் பிரச்னை: காத்திருப்பு போராட்டம்
/
காட்டு யானைகள் பிரச்னை: காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 24, 2024 11:39 PM

கூடலுார் : கூடலுார் குச்சிமுச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட வலியுறுத்தி, கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கூடலுார், தேவர்சோலை குச்சிமுச்சி மற்றும் அதனை ஒட்டிய கவுண்டன்கொல்லி, கல்லிங்கரை, மச்சிவயல், கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த யானைகளை விரட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கான நடவடிக்கையில் வன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தாலும் யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இது தொடர்பாக, சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது, கும்கி யானைகள் மூலம் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதுவரை அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, குச்சிமுச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒருங்கிணைந்து குச்சிமுச்சி பகுதியில் தனியார் கட்டடத்தில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நான்காவது நாளாக நடத்தி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'கடந்த பல வாரங்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு மட்டுமின்றி பகலிலும் ஊருக்குள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளோம். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும்,' என்றனர்.
ஏற்கனவே, அஞ்சுகுன்னு மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, 11ம் தேதி முதல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.