/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளுக்கு விடுமுறை; சிரமத்தில் சுற்றுலா பயணிகள்
/
கடைகளுக்கு விடுமுறை; சிரமத்தில் சுற்றுலா பயணிகள்
ADDED : மே 05, 2024 11:39 PM

கூடலுார்;மதுரையில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டை முன்னிட்டு. கூடலுார் நகரில் கடைகள் அடைக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில், வணிகர் தின மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் வியாபாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்திருந்தனர். கூடலுார் நகரில் ஒரு சில கடைகளை தவிர்த்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், வார நாட்கள் முழுதும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். கேரளா, கர்நாடகாவிலிருந்து, ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள், கூடலுாரில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகினர்.
வெளி மாநில சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'சுற்றுலா மையமான நீலகிரிக்கு, வார விடுமுறை நாட்களில் கூடலூர் வழியாகவே வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறோம். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், கடும் சிரமத்துக்கு ஆளாகினோம். எனவே, எதிர்காலத்தில் வார விடுமுறை நாட்களில் கடைகளுக்கு விடுமுறை அளிப்பதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.