/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரோஜா பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
/
ரோஜா பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
ரோஜா பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
ரோஜா பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி
ADDED : மே 22, 2024 07:46 PM
ஊட்டி:ஊட்டியில் ரோஜா கண்காட்சி நிறைவு பெற்ற பிறகும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசனை ஒட்டி, ரோஜா பூங்காவில், 19வது ரோஜா கண்காட்சி கடந்த, 10ம் தேதி துவங்கியது. 19ம் தேதி ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது.
மலர் கண்காட்சியை தோட்டக்கலைத்துறை நிர்வாகம் இம்மாதம், 26ம் தேதி வரை நீட்டித்து உள்ளது.
இந்நிலையில், ஊட்டி ரோஜா கண்காட்சியை ஒட்டி சிறியவர்களுக்கு, 50 ரூபாய்; பெரியவர்களுக்கு, 100 ரூபாய் கட்டணம், மே 10ம் தேதிமுதல் வசூலிக்கப்பட்டது.
கண்காட்சி நிறைவு விழாவுக்கு பின்பும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசு சார்பில் எவ்வித முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை.
சேலம் சுற்றுலா பயணி சுதா கூறியதாவது:
ஊட்டிக்கு மூன்றாவது முறையாக சுற்றுலா வந்துள்ளேன். ரோஜா கண்காட்சியின்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது எங்களுக்கு தெரியும். ஆனால், நிறைவு விழாவுக்கு பின்பும் அதே கட்டணம் வசூலிப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவதாக உள்ளது.
பயணிகளின் நலன் கருதி உடனே பழைய கட்டணத்தை (சிறியவர்களுக்கு, ரூ.20; பெரியவர்களுக்கு, ரூ.40) வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில்,''ரோஜா கண்காட்சி, 19ம் தேதி நிறைவடைந்தது. கண்காட்சிக்காக உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணம் தற்போதும் வசூலிக்கப்படுவது உண்மை தான். தலைமை அதிகாரிகளின் உத்தரவு வந்த பின் கட்டணம் குறைக்கப்படும்,'' என்றார்.

