ADDED : ஜூன் 24, 2026 07:01 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, மாந்தோப்பில் நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முதலமடை போத்தம்பாடம் பத்திச்சிறை பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் வினு, 41. இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு அருகில் உள்ள மாந்தோப்பில் நிலத்தை உழுது முடித்துவிட்டு, அடுத்த விவசாய நிலத்திற்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
அப்போது, இரண்டு நிலங்களுக்கும் இடையே இருந்த செங்குத்தான வரப்பு வழியாக டிராக்டரை மேலே ஏற்ற முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்தில், டிராக்டரின் அடியில் வினு சிக்கிக்கொண்டார். அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
