ADDED : ஆக 06, 2026 05:22 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பஜார் சாலையில், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்தில் சிக்கல் தொடர்கிறது.
பந்தலுார் அருகே உப்பட்டி பஜார் பகுதி சாலை, தமிழக கேரளா இணைப்பு சாலையாக உள்ளது. இங்குள்ள சாலையின் இரண்டு பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல், வாகன உரிமையாளர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், கனரக வாகனங்கள் வரும்போது, பிற வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
பெரும்பாலான நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல், நோயாளிகள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் போலீசார் தினசரி ஆய்வு மேற்கொண்டு, சாலையில் வாகனங்களை நிறுத்தும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து சிக்கலை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
மக்கள் கூறுகையில், ‘உப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான, நிலப்பகுதியை மீட்டு அங்கு வாகன பார்க்கிங் தளம் அமைக்கவும், போக்குவரத்து சிக்கலை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
