/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துப்பாக்கியால் சுட்டதில் டிரான்ஸ்பார்மர் சேதம்
/
துப்பாக்கியால் சுட்டதில் டிரான்ஸ்பார்மர் சேதம்
ADDED : பிப் 24, 2025 10:18 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, காட்டுப்பன்றிக்கு குறி வைத்து துப்பாக்கியால் சுட்டதில், மின்வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குமரம்புத்தூர் அருகே மோதிக்கல் என்ற பகுதி உள்ளது.
வன எல்லை பகுதியான இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
சமீப காலமாக, இப்பகுதியில் காட்டு பன்றிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இதையடுத்து ஊராட்சி, வனத்துறையினர் அனுமதியோடு, காட்டுப்பன்றியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 22ம் தேதி இரவு, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுப்பன்றிக்கு குறிவைத்து துப்பாக்கியால் சுட்டதில், திசை மாறி அருகிலுள்ள மின்வாரியத்தின் டிரான்ஸ்பார்மரில் தோட்டா பட்டு சேதமடைந்தது.
இதனால், அப்பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது.
தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், சொர்னூரில் இருந்து புதிய டிரான்ஸ்பார்மரை கொண்டு வந்து பொருத்தி நேற்று மின்வினியோகத்தை சரி செய்தனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இப்பகுதியில் மின்னழுத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சமீபத்தில் நிறுவப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர், துப்பாக்கியால் சுட்டதில் சேதமடைந்தது. இதனால், மின்வாரியத்துக்கு, 2.5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதை ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும், என, போலீசில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.

