ADDED : மார் 23, 2024 01:49 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கு, 79, என்ற மூதாட்டி. தனியாக வசித்து வரும் நிலையில், இவருக்கு, வருவாய் துறையால் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2022 அக்., மாதம் முதல், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
மேலும், ரேஷன் அட்டையிலும் பெயர் ரத்து செய்யப்பட்டு, 'பொருட்கள் வழங்க முடியாது' என, வருவாய் துறையினர் தெரிவித்தனர். வருவாய் துறை அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்த மூதாட்டி, தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்தும் பயனில்லை.
இரண்டு ஆண்டுகளாக இவர், உணவுக்கு சிரமப்படுகிறார்.
பழங்குடியினர் அமைப்பின் நிர்வாகி நீலகண்டன் கூறுகையில், ''உயிரோடு இருக்கும் மூதாட்டி, தான் உயிரோடு இருப்பதற்கான அடையாள அட்டைகளை காண்பித்தும், இறந்துவிட்டதாக கணக்கு காட்டி அவரின் அடிப்படை உரிமையை ரத்து செய்துள்ளது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
