/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொது தேர்வில் சாதித்த பழங்குடியின மாணவிகள்
/
பொது தேர்வில் சாதித்த பழங்குடியின மாணவிகள்
ADDED : மே 10, 2024 11:34 PM

பந்தலுார்;பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், 10ம் வகுப்பு பொது தேர்வில் பழங்குடி மாணவிகள் சாதித்துள்ளனர்.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பணியர், காட்டு நாயக்கர், குரும்பர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், குரும்பர் சமுதாய மக்கள் தவிர மற்ற இரு பழங்குடியின மக்களும், வெளியாட்களை பார்த்தால், ஓடி ஒளிந்து கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள்.
அதனால், இவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கு வருவதில்லை. இங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் விடாமுயற்சியால், ஒரு சில பழங்குடியின மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்கின்றனர். இந்நிலையில், பந்தலுார் அருகே பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பாலாவயல் பழங்குடியினர் கிராமத்தில் இருந்து, காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மாறன் -ஜானு தம்பதியின், மகள் சுருதி, நாள்தோறும் பள்ளிக்கு வருகை தந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்.
அதில், 206 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காட்டுநாயக்கர் சமுதாயத்தில் ஒரு பெண் பொது தேர்வில் வெற்றி பெற்றது அப்பகுதியில் பெருமையாக கருதப்படுகிறது. மாணவிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மீரா, பி.டி.ஏ. தலைவர் சிவக்குமார், வகுப்பு ஆசிரியர் செமினா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து, மேலும் படிக்க உதவி செய்வதாக உறுதி அளித்தனர்.
இதேபோல், எருமாடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பணியர், குரும்பர், காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த, 9 பழங்குடியின மாணவிகள், எருமாடு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து,10 வகுப்பு தேர்வு எழுதியதில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் நேதாஜி நகர் என்ற இடத்தை சேர்ந்த குறும்பர் சமுதாயத்தை சேர்ந்த அர்ஜுணன்- புஷ்பா தம்பதியின்மகள் கவிதா, 425 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அவருக்கு பாராட்டு குவிகிறது.