மைதானத்தில் விழும் நிலையில் உள்ள மேடையை அகற்ற வலியுறுத்தல்
மைதானத்தில் விழும் நிலையில் உள்ள மேடையை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 10, 2026 12:20 PM
பந்தலுார்: ‘பந்தலுார் பஜாரை ஒட்டிய மைதானத்தில், விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
பந்தலுார் பஜாரில் நகராட்சி கட்டுப்பாட்டில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், ஷட்டருடன் கூடிய மேடை அமைக்கப்பட்டது.
அதில், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், குடியிருக்க வீடு இல்லாத மாற்றுத்திறனாளி சந்திரன் என்பவர் குடும்பத்தினர், இதனை தங்கள் வீடாக பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த கட்டடம் சிதிலடைந்து, மேற்கூரை மற்றும் ஷட்டர்; சுவர்கள் பலமிழந்து விழும் நிலையில் உள்ளன. தற்போது இங்கு குடி இருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த கட்டடம் பயனற்று காணப்படுகிறது.
விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகையில்,‘இந்த கட்டடத்தை முழுமையாக அகற்றி, பொதுமக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக, புதிய கூட்ட மேடை அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
