/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்பு துறை தீவிரம்
/
பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்பு துறை தீவிரம்
பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்பு துறை தீவிரம்
பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்பு துறை தீவிரம்
ADDED : மே 14, 2024 12:51 AM

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க, 14 பண்ணைகளில் உள்ள, 2,875 பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்தாண்டு நீலகிரி, கோவை மாவட்டங்களில் பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு, பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், பன்றிக்காய்ச்சல் வைரஸால் பரவுகிறது. இந்நோய் பன்றிகளிடமிருந்து, மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது பன்றிகளுக்கு பயன்படுத்தப்பட்ட உணவு, தண்ணீர் மற்றும் அவைகளுக்கு பயன்படுத்திய பொருள்கள் வாயிலாக பரவும்.
பன்றிகளுக்கு அதிக காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை இருக்கும். சினை பன்றிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும். கிளாசிக்கல் ஸ்வைன் ப்ளூ (சி.எஸ்.எப்.,) பாதிப்பு உள்ள பன்றிகளுக்கு தடித்த தோல் அல்சர், முடக்கு வாதம், கால்களின் மூட்டு இணைப்புகளில் வீக்கம் காணப்படும்.
அத்தகைய அறிகுறிகள் உள்ள பன்றிகளை தனிமை படுத்த வேண்டும். மேலும், வெளி ஆட்களை பண்ணைக்குள் அனுமதிக்க கூடாது. அறிகுறி தெரிந்தவுடன் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை டாக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த நோய்க்கு என தனிப்பட்ட மருத்துவம் கிடையாது. தற்போது, சி.எஸ்.எப்., தடுப்பூசி போடப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 14 பண்ணைகளில் தற்போது, 2,875 பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இவைகளுக்கு தடுப்பூசி போட, 1200 தடுப்பூசிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் பன்றிகளுக்கு போடப்பட்டு வருகின்றன. சினை பன்றிகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. இம்மாதம், 25ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். பன்றிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றார்.

