/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் லாரிகளில் தண்ணீர் வினியோகம்
/
ஊட்டியில் லாரிகளில் தண்ணீர் வினியோகம்
ADDED : மே 06, 2024 11:08 PM

ஊட்டி:ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, லாரிகள் மூலம், நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகித்து வருகிறது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகளில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தவிர, நாள் ஒன்றுக்கு, 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நடப்பாண்டு, கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், ஊட்டி நகரப் பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும் நீர் ஆதாரங்களான, பார்சன்ஸ் வேலி, மார்லி மந்து, டைகர் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கிளன்ராக் ஆதாரங்களில் தண்ணீர் இருப்பு, வெகுவாக குறைந்துள்ளது.
தவிர, 27 கிணறுகளிலும் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. மழை பெய்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
இதனால், தண்ணீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளதால், ஊட்டி நகராட்சி நிர்வாகம், குடியிருப்பு பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் வினியோகித்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது.
ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு, மூன்று லாரிகளில், நாளுக்கு, 10 லோடுகள் வரை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில், கூடுதலாக தண்ணீர் வழங்கப்படும்.
தவிர, கார் 'பார்க்கிங்', சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள், கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.