பொய்த்து போன தென்மேற்கு பருவ மழையால்... தண்ணீர் தட்டுப்பாடு!:வறட்சியின் பிடியில் சிக்கும் இரண்டாவது சிரபுஞ்சி
பொய்த்து போன தென்மேற்கு பருவ மழையால்... தண்ணீர் தட்டுப்பாடு!:வறட்சியின் பிடியில் சிக்கும் இரண்டாவது சிரபுஞ்சி
UPDATED : ஜூலை 24, 2026 04:54 AM
ADDED : ஜூலை 23, 2026 05:22 PM

பந்தலுார்: நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால், இரண்டாவது சிரபுஞ்சியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மலை மாவட்டமான நீலகிரியில், கேரளா மாநிலத்தில் மே இறுதி மாதத்தில் துவங்கும், தென்மேற்கு பருவமழை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், இதன் தாக்கம் அதிகரித்து ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.
'எல்நினோ' பாதிப்பின் தாக்கம் இந்நிலையில், நடப்பாண்டில் பசிபிக் பெருங்கடல் பகுதியில், சராசரியை விட, 0.5 சதவீத அளவு வெப்பநிலை உயர்ந்ததால் 'எல்நினோ' உருவாகியுள்ளது. பொதுவாக, மண்ணில் ஈரப்பதம் இருந்தால் சூரிய வெப்பம் அதை ஆவியாக்கும். தற்போதைய காலநிலை மாற்றங்களால் ஈரம் இல்லாத மண்ணில் வெப்பம் மட்டுமே அதிகரிக்கும்.
இதனால், தென்மேற்கு பருவமழை குறைந்து, நீலகிரி வறண்ட மாவட்டமாக மாறி வருகிறது. இம்மாதம் வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு மழை பொழிவு இப்பதற்கு பதில், கோடை காலத்தை நினைவூட்டும் வகையில் வெப்பம் அதிகரித்துள்ளது.
வெகுவாக குறைந்த மழை அளவு கடந்த ஆண்டு, ஜன., முதல் ஜூலை மாதம் வரை இரண்டாவது சிரபுஞ்சியான தேவாலா பகுதியில், 322.75 செ.மீ மழை பெய்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூலை, 15ஆம் தேதி வரை, 140.10 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால், நீரோடைகள் மற்றும் ஆறுகளில், தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து கிணறுகளில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதனால், நெல்லியாளம் நகராட்சி சார்பில், தண்ணீர் தொட்டிகளில் லாரி தண்ணீர் நிரப்பும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
அத்துடன் கேரளாவிற்கு அதிகளவு தண்ணீரை கொண்டு செல்லும் பாண்டியாறு--புன்னம்புலா, கோட்டூர் ஆறுகள், கபினியின் முக்கிய கிளை நதியான பொன்னானி ஆறுகளில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், தேயிலை, குறுமிளகு, காபி மற்றும் காய்கறி விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் மிக கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'எல் நினோ' பாதிப்பு அதிக அளவு வெப்பமான காலநிலையை உணர்த்தும் நிலையில், மலை மாவட்டமான, நீலகிரியில் மரங்கள் மற்றும் சோலைகளை அழிப்பதற்கும், சதுப்பு நிலங்களில் கட்டடங்கள் கட்டுவதும் அதிகரித்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம்; உள்ளூர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதேநிலை தொடர்ந்தால், சுற்றுலா பயணிகளுக்கான சொர்க்கபூமி, எதிர்காலத்தில் வெப்ப பூமியாக மாறுவதை தடுக்க முடியாது,' என்றனர்.
