/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர்வழிப்பாதை மீட்கும் பணி: பொதுமக்கள் எதிர்ப்பு
/
நீர்வழிப்பாதை மீட்கும் பணி: பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:38 PM
அன்னுார் : நீர்வழிப்பாதை மீட்கும் பணி பொதுமக்கள் எதிர்ப் பால் நிறுத்தப்பட்டது.
அன்னுார் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அன்னுார் குளத்திலிருந்து, இட்டேரி வீதி, நாகமாபுதூர் வழியாக, பனந்தோப்பு மைல் வரை உள்ள நீர்வழிப்பாதையை அளவீடு செய்து தரும்படி வருவாய் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 975 மீட்டர் தூர பாதை பராமரிப்பு இல்லாததால், புதர்கள், முட்கள் அதிகரித்து, பாதையே மறைந்து போனது.
கடந்த டிசம்பர் மாதம் அன்னுாரில் அதிக அளவில் மழை பெய்தது. மழை நீர் மற்றும் அத்திக்கடவு நீரால் அன்னுார் குளத்தில் 60 சதவீதம் நீர் நிரம்பியது. நீர்வழிப் பாதை இல்லாததால், குளத்து நீர் மற்றும் மழை நீர், தர்மர் கோயில் வீதியில் உள்ள தோட்டங்கள், புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ மற்றும் அல்லிகுளம் ரோட்டில் உள்ள தோட்டங்களில் தேங்கி நின்றது.
ஏழு மாதங்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை. இதனால் ஏராளமான மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் நீர்வழிப் பாதை என்று பொதுமக்களால் அழைக்கப்படும் வண்டிப்பாதையை அளவீடு செய்து தரும் பணியை செய்து முடித்தனர். இதை அடுத்து பேரூராட்சி சார்பில் சத்தி ரோட்டில் உள்ள இட்டேரி வீதியில் துவக்கி, அப் பாதையில் புதர்கள், முட்களை அகற்றும் பணி நேற்று நடந்தது.
தாசில்தார் நித்தில வள்ளி, துணை தாசில்தார் ஆகாஷ், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் பெலிக்ஸ் ஆகியோர் இப் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக 300 மீட்டர் தூரத்திற்கு பாதை கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.
அந்தப் பாதையை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
'எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, அதன் பின்னர் மீண்டும் அந்த பாதையை மீட்கும் பணி தொடரும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூவில், மழை நீர் சூழ்ந்துள்ள ஏழு மாத பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.