/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவி
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவி
ADDED : ஜூலை 03, 2024 02:23 AM
ஊட்டி;ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 240 மனுக்கள் பெறப்பட்டு, 21 நபர்களுக்கு, 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
ஊட்டியில், திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடக்கிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க, பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் படை வீரர் கிருஷ்ணப்பா என்பவரின் மனைவி புஷ்பம்மாள் என்பவருக்கு, பக்கவாத நோய் மருத்துவ சிகிச்சைக்காக, மாதந்தோறும், 7,000 ரூபாய் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கூடலுார் மற்றும் குன்னுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பயன்பாட்டிற்கும், கோத்தகிரி மற்றும் பந்தலுார் வட்டாட்சியர் அலுவலக பயன்பாட்டிற்கும், 4 புதிய வாகனங்களுக்கான சாவி வழங்கப்பட்டது.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில், அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கூடலுார் தெப்பக்காடு பகுதியை சேர்ந்த, மாறன் என்பவருக்கு உன்னிகுச்சிகள் மூலம், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலை விரிவு படுத்துவதற்கு, 100 சதவீத மானியத்தில், 4.25 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கலை பண் பாட்டு துறை சார்பில், கோவை மண்டலம் கலை பண்பாட்டு மையம் உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் கலை போட்டிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு, 70 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.