110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?: 18 ஆண்டுகளாக காத்திருக்கும் கூடலுார் தொகுதி மக்கள்
110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?: 18 ஆண்டுகளாக காத்திருக்கும் கூடலுார் தொகுதி மக்கள்
UPDATED : ஜூன் 20, 2026 12:41 PM
ADDED : ஜூன் 19, 2026 06:55 PM

கூடலுார்: 'கூடலுாரில் பயன்பாட்டில் உள்ள, 66 கே.வி., துணை மின் நிலையத்தில், 110 கே.வி., திறன் கொண்ட 'டிரான்ஸ்பார்மர்' அமைத்து தரம் உயர்த்த வேண்டும்,' என, உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார், பந்தலூர் பகுதியில் அதிகரித்து வரும், மின் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், கூடலுார், உப்பட்டி, சேரம்பாடி பகுதியில் உள்ள, 66 கே.வி., துணை மின் நிலையங்களை, 110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்றும் பணி, 2008ல் துவங்கப்பட்டது.
முதல் கட்டமாக கூடலுார் 'மைக்காமவுண்ட்' பகுதியில், 110 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
இதற்காக, கிளன்மார்க்கன் மின் நிலையத்திலிருந்து, கூடலுார் வரை மின் வினியோகம் செய்வதற்காக மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. வனத்துறை தடை உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால், கூடலுார், 110 கே.வி., துணை மின் நிலைய பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனிடையே, அத்திப்பாளியில் செயல்பட்டு வந்த, 66 கே.வி., துணை மின் நிலையம், மைக்கா மவுண்ட் பகுதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, அதனை, 110 கே.வி., திறன் கொண்ட மின் நிலையமாக மாற்றும் வகையில், சிங்கார -கூடலுார் இடையே, உயர் மின் அழுத்த கம்பிகள் மாற்றப்பட்டு, மேற்கண்ட சோதனை வெற்றிகரமாக முடித்தனர்.
'அப்பகுதியில், 110 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின் சப்ளை வழங்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கூடலுாரில் தொடரும் மின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 66 கே.வி., திறன் கொண்ட கூடலுார் துணை மின் நிலையத்தை, 110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையமாக மாற்ற, தற்போதைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
