/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏ.ஐ., கேமராவிலிருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த 119 'அலர்ட்' தகவல்!: விலங்குகளிடமிருந்து மக்களை காக்க உதவிய தொழில்நுட்பம்
/
ஏ.ஐ., கேமராவிலிருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த 119 'அலர்ட்' தகவல்!: விலங்குகளிடமிருந்து மக்களை காக்க உதவிய தொழில்நுட்பம்
ஏ.ஐ., கேமராவிலிருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த 119 'அலர்ட்' தகவல்!: விலங்குகளிடமிருந்து மக்களை காக்க உதவிய தொழில்நுட்பம்
ஏ.ஐ., கேமராவிலிருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த 119 'அலர்ட்' தகவல்!: விலங்குகளிடமிருந்து மக்களை காக்க உதவிய தொழில்நுட்பம்
UPDATED : ஜன 23, 2026 06:22 AM
ADDED : ஜன 23, 2026 06:06 AM

கூடலுார்: கூடலுாரில், அதிக வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள, 46 செயற்கை நுண்ணறிவு கேமராக்களிலிருந்து, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு, கிடைக்கும், 'அலர்ட்' தகவல்களால், வனப் பகுதியை ஒட்டி வாழ்ந்து வரும் கிராம மக்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடலுார், பந்தலுார் பகுதியில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
'இதனை தடுக்கும் பணியில் யானை விரட்டும் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மற்றும் அதிவிரைவு குழுக்கள்,' என, 120 தற்காலிக காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதற்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில், வனப்படையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ், 6 கோடி ரூபாய் மதிப்பில் ஜீன்பூல் தாவர மையத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
34 ஏ.ஐ., கேமராக்கள் இந்த மையத்துடன், மனித - வனவிலங்கு மோதல் அதிகம் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, 34 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், 12 இடங்களில் உயர் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைக்கும் தகவல்களை, ஊழியர்கள், 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர்.
வனவிலங்கு நடமாட்டம் குறித்து மையத்துக்கு வரும் தகவல்களை, பணியில் இருக்கும் வன ஊழியர்கள், கிராமத்தில் உள்ள நபர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்து எச்சரிக்கை செய்கின்றனர். அப்பகுதியில் உள்ள வன ஊழியர்கள், வன விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
119 'அலர்ட்' தகவல்கள் இந்நிலையில், இந்த தொழிற்நுட்பத்தால், கடந்த மூன்று மாதத்தில், இது போன்று கிடைக்கப்பெற்ற, 119 தகவல்களின் அடிப்படையில், வன விலங்குகளிடமிருந்து எளிதாக, மக்கள் பாதுக்கப்பட்டது, வன அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''உயர்தர தொழில் நுட்பத்தின் வாயிலாக, மனித - வனவிலங்குகள்மோதல் அதிகம் உள்ள, 46 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உடனுக்குடன் பெற்று, நடவடிக்கை எடுத்து வருவதன் வாயிலாக மனித -- வனவிலங்கு மோதல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன், விலங்குகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இத்தொழில் நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.

