/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
ADDED : மே 16, 2025 06:37 AM

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127 வது மலர் கண்காட்சியை நேற்று காலை, 10:30 மணிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மலர்களால் உருவாக்கப்பட்ட, சோழர் பேரரசின் பிரம்மாண்ட அரண்மனை அலங்காரம், சிம்மாசனம் ஆகியற்றை பார்வையிட்டார். அனைவரின் வலியுறுத்தலுக்கு இணங்க, குடும்பத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்து 'போஸ்' கொடுத்தார்.
அதன்பின், 24.60 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லத்தை திறந்து வைத்தார். மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட, 40 ஆயிரம் வண்ண மலர் தொட்டிகள்; 8 அடி உயரம், 35 அடி நீளம் கொண்ட மலர்களால் உருவாக்கப்பட்ட அன்னபறவை படகு; 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா மலர்களால் கல்லணை மற்றும் ஊஞ்சல், கண்ணாடி, இசை கருவிகள், யானை, புலி, சதுரங்க அமைப்பு உள்ளிட்ட மலர் அலங்கார வடிவமைப்புகளை பார்வையிட்டார்.
பணம் கொடுத்து தேயிலை துாள்
தொடர்ந்து, மலர் கண்காட்சி மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட மலர்கள், தனியார் மற்றும் அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை மனைவி துர்காவுடன் ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை அரங்கை பார்வையிட்ட போது, மனைவி துர்கா தேயிலைதுாள் பாக்கெட் வாங்கினார். 500 ரூபாயை ஸ்டாலின் கொடுத்தார்.
திரும்பி சென்ற ராணுவ இசை குழு
இறுதியாக விழா மேடைக்கு எதிரே அமர்ந்து, படுகர், தோடர், கோத்தர், திபெத்தியர் நடனங்களை முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா உட்பட பலர் பார்வையிட்டனர். ஆண்டுதோறும், மலர் கண்காட்சிக்கு முதல்வர் வருகையின் போது, ராணுவ இசை குழுவினரின் பேண்டு வாத்தியங்கள் இடம் பெறும்.
இம்முறை, இத்தாலியன் கார்டன் பகுதியில் ராணுவ இசைகுழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். திடீரென கன மழை பெய்ததால் முதல்வர் அங்கு செல்லாமல் திரும்பி சென்றார். முதன் முறையாக ராணுவ இசை குழுவினரும் ஏமாற்றத்துடன் சென்றனர். நடன நிகழ்ச்சி நடந்த போது, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, எஸ்.பி., நிஷாவுக்கு இருக்கை வசதி இல்லாததால் இருவரும் வெளியேறினர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சியின் போது, நீலகிரிக்கான சில திட்ட அறிவிப்புகள் முதல்வரால் அறிவிக்கப்படும். கலை நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு முதல்வர் மேடைக்கு வந்து பேசுவார் என கட்சியினரும்; மக்களும் எதிர்பார்த்தனர், ஆனால், மேடைக்கு செல்லாமல் முதல்வர் சென்றதால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நிகழ்ச்சியில், நீலகிரி எம்.பி.ராஜா., அமைச்சர்கள் பன்னீர் செல்வம், சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் லட்சுமி பவ்யா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.