/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பட்டா கேட்டு வந்த 153 குடும்ப உறுப்பினர்கள்
/
பட்டா கேட்டு வந்த 153 குடும்ப உறுப்பினர்கள்
ADDED : செப் 30, 2025 10:03 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே நாயக்கன் சோலை கிராமத்தில், பட்டா கேட்டு, 153 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் நாயக்கன்சோலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 153 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருவதுடன், அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
கிராமத்து மக்களுக்கு நிலப்பட்டா வழங்காத நிலையில், அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமத்தை சேர்ந்த பலரும் பட்ட படிப்புகள் முடித்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
பட்டா இல்லாத நிலையில், அவசர தேவைகளுக்கு வங்கி கடன் பெறுவது, அரசு மூலம் வழங்கப்படும் சாலை, குடியிருப்பு, பாதுகாப்பு சுவர் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகிறது.
இப்பகுதி மக்கள் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில், 'தங்களுக்கு அரசு பட்ட வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி, நேற்று சேரங்கோடு பகுதியில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தனித்தனியாக தங்கள் ஆவணங்களுடன் மனு கொடுத்துள்ளனர்.
இப்பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் கூறுகையில், ''இந்த கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் குடியிருந்து வரும் நிலையில், தேர்தலில் ஓட்டு போடுவது, அரசு பள்ளிகளில் மாணவர்களை படிக்க வைப்பது போன்ற நிலையில் இருந்தும், நாங்கள் குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க அரசு மறுப்பது வருவது, வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அரசு பரிசீலனை செய்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.