ADDED : செப் 22, 2025 10:03 PM
ஊட்டி:
நீலகிரியில் சமூக நலத்துறை சார்பில், 607 பயனாளிகளுக்கு 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வரின், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக திருமண நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரியில், 2022-2025ம் நிதியாண்டு வரை, விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 469 பயனாளிகளுக்கு 1.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 85 பயனாளிகளுக்கு, 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், 600 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. அன்னை தெரசா ஆதரவற்றோர் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 51 பயனாளிகளுக்கு, 21.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், 408 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
'2023-25ம் நிதியாண்டில் டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 2 பயனாளிக்கு 50 ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், 16 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
மொத்தம் 607 பயனாளிகளுக்கு, 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், 4,776 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.