/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு
/
இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு
இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு
இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு
ADDED : பிப் 07, 2024 11:17 PM
பாலக்காடு : பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 287 பேர் இறந்துள்ளனர் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாலக்காடு ரயில்வே கோட்ட அலுவலகம் அறிக்கையில் கூறியிருப்பது:
பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை ஸ்டேஷன் பகுதிக்குள், 135 பேரும்; சொர்னுர் ஸ்டேஷன் பகுதிக்குள், 152 பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளில், தண்ட வாளத்தை கடந்த போது, ரயில் மோதி இறந்துள்ளனர்.
பாலக்காட்டில், 39 பேர்; சொர்னுாரில் 133 பேரும் ரயில் மோதி காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் தண்டவாளத்தை கடந்த குற்றத்திற்கு, 346 வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த குற்றத்துக்கு, 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துகளை குறைக்க ரயில்வேயும், ரயில்வே பாதுகாப்பு படையும் விழிப்புணர்வு முகாம்களை தீவிரப்படுத்தி உள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்களிலும் கூடுதல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. தண்டவாளங்களை கடந்து செல்லும்போது, மொபைல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் தண்டவாளங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சமூக நலன் கருதி, ரயில் தண்டவாளத்தில் தற்கொலை சம்பவங்களை தவிர்க்க சிறப்பு விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

