ADDED : ஏப் 05, 2026 03:42 AM
ஊட்டி: சென்னையை சேர்ந்தவர் தஸ்னீம் பாத்திமா, 42; சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர். இவர் தன் குடும்பத்துடன் மூன்று நாட்களுக்கு முன், ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஊட்டி மிஷினரிஹில் தங்கும் விடுதியில் , குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது ஆசம், 41, சையது, 32, தபரீஷ் செரிப், 41, ஆகியோர் அதே தங்கும் விடுதியில், மற்றொரு அறையில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாலை சுட வைக்க, தங்கும் விடுதியில் இருந்த மின் அடுப்பை தஸ்னீம் பாத்திமா பயன் படுத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த ஆசம், மின் அடுப்பை கேட்டுள்ளார்.
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், தஸ்னீம் பாத்திமா, விடுதி உரிமையாளரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
தபரீஷ் செரிப், அவரது போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். மேலும், தஸ்னீம் பாத்திமாவை, ஆசம், சையது, தபரீஷ் செரிப் ஆகியோர் தாக்கியதில், அவருக்கு பல் உடைந்தது. ஊட்டி போலீசார், ஆசம் உட்பட மூவரையும் கைது செய்தனர்.
