ADDED : ஜன 18, 2026 05:11 AM

குன்னுார்: கட்டுமான பணியின் போது மண் சரிந்து, மூன்று வடமாநில தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, ஓதனட்டி சாலையில் முத்துகிருஷ்ணன் என்பவரின் இடத்தில் நேற்று கட்டுமான பணிகளுக்காக, மண் தோண்டும் பணியில், வட மாநில தொழிலாளர்கள் ஐவர் ஈடுபட்டனர்.
மதியம், 2:40 மணியளவில், 40 அடி உயரத்தில் இருந்து திடீரென மண் சரிந்ததில், மூவர் மண்ணில் புதைந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து, ஒருவரை மீட்டு, குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மண் அகற்றப்பட்டது. எம்.ஆர்.சி., ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் இறங்கினர். இருவரின் உடல்கள் ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டு குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விசாரணையில், கொல்கட்டா முர்ஷிதாபாத்தை சேர்ந்த நஜ்பூர், 45; அகில்சேக், 35; உபைத் ரகுமான், 25 ஆகியோர் மண்ணில் புதைந்து பலியானது தெரிந்தது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் கலெக்டர் சங்கீதா, குன்னுார் டி.எஸ்.பி., ரவி, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குமார் உட்பட அதிகாரிகள் வந்து விசாரித்தனர்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''இப்பகுதியில் கட்டுமான பணிக்காக அனுமதி பெற்று பணிகள் மேற்கொண்டு உள்ளனர். விதிமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
