/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விற்பனைக்கு வந்த 30 டன் மலை காய்கறிகள்
/
விற்பனைக்கு வந்த 30 டன் மலை காய்கறிகள்
ADDED : ஜன 03, 2024 11:30 PM

ஊட்டி : ஊட்டி மார்க்கெட்டுக்கு, 30 டன் மலை காய்கறிகள் விற்பனைக்கு வருவதால், சமவெளி பகுதிகளுக்கு தடையின்றி கொண்டு செல்லப்படுகிறது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான, 'அணிக்கொரை, கடநாடு, காவிலோரை, எப்பநாடு, காரப்பிள்ளு, தாவணெ, எம்.பாலாடா, நஞ்சநாடு,' உட்பட பல கிராமங்களில், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் இங்கிலீஸ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
இங்கு அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகள் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்தாண்டில் ஆரம்ப முதல் மலை காய்கறி வரத்து கணிசமான அளவில் வந்ததால் தடையின்றி பிற இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பனிபொழிவு சமயத்தில் குறைந்தளவில் காய்கறி வரத்து இருக்கும். ஆனால், அக்., மாதம் முதல் டிச., மாதம் வரை அவ்வப்போது பெய்த மழைக்கு மலை காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
கடந்தாண்டில் ஜன., முதல் வாரத்தில், 15 முதல் 20 டன் அளவுக்கு மலை காய்கறி வரத்து இருந்தது. தற்போது, கடந்த மூன்று நாட்களாக, 25 முதல் 30 டன் அளவுக்கு மலை காய்கறிகள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜ முகமது கூறுகையில், ''கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு துவக்கத்தில், சராசரியாக, 20 முதல் 30 டன் போதுமான அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு வருவதால் பிற இடங்களுக்கு தடையின்றி கொண்டு செல்லப்படுகிறது,'' என்றார்.