ADDED : மார் 23, 2026 10:01 PM

பாலக்காடு: பாலக்காட்டில் இரு இடங்களில் நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மங்கரை பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கிருஷ்ணகுமார், 43. அவரது இளைய மகன் ஆரவ் கிருஷ்ணா, 13,வுடன், நேற்று முன்தினம் மாலை ஏலப்புள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். அங்கிருந்து, வீடு திரும்பிய போது, பாறை பேட்டை அருகே கார் ஒன்று ஸ்கூட்டரில் மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்து, தந்தையும், மகனும் சாலையில் சரிந்தனர்.
அப்போது, மற்றொரு கார், அவர்கள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* பாலக்காடு மாவட்டம் பெரிங்கோட்டுக்குறிச்சி பருத்திப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ், 23. அவரது நண்பர்கள் கோட்டாயி கரியங்கோடு பகுதியைச் சேர்ந்த சுர்ஜித், 23, பழைய கல்லேக்காட்டை சேர்ந்த அஸ்வின், 23, மூவரும், கோட்டாயி கண்டத்தார்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா காண சென்றனர்.
நேற்று, அதிகாலை மூவரும் ஒரே பைக்கில் திரும்பி வந்த போது, பருத்திப்பள்ளி பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதியது. விபத்தில், ஆகாஷ், சுர்ஜித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கோட்டாயி போலீசார் விசாரிக்கின்றனர்.
