/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐ.டி.ஐ., யில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் 40 சதவீதம் டிராப் அவுட்: பல நிறுவனங்களில் வேலை கொடுத்தும் ஆர்வமில்லை
/
ஐ.டி.ஐ., யில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் 40 சதவீதம் டிராப் அவுட்: பல நிறுவனங்களில் வேலை கொடுத்தும் ஆர்வமில்லை
ஐ.டி.ஐ., யில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் 40 சதவீதம் டிராப் அவுட்: பல நிறுவனங்களில் வேலை கொடுத்தும் ஆர்வமில்லை
ஐ.டி.ஐ., யில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் 40 சதவீதம் டிராப் அவுட்: பல நிறுவனங்களில் வேலை கொடுத்தும் ஆர்வமில்லை
ADDED : மே 23, 2024 11:02 PM

பெ.நா.பாளையம்:கோவை அரசு ஐ.டி.ஐ.,(அரசினர் தொழில் பயிற்சி)யில் சேரும் மாணவர்களில் 40 சதவீதம் பேர், பல்வேறு காரணங்களால், படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறும் அவலம் நீடிக்கிறது.
கோவை மாவட்டம் அல்லாமல், பிற மாவட்டங்களிலும், தொழில் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், பணியாற்ற திறன்மிக்க தொழிலாளர்கள் கிடைக்காமல், தொழில் துறையினர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, அரசு ஐ.டி.ஐ.,யில் பல்வேறு பிரிவுகளில், தொழில் பயிற்சி படிப்பு முடித்தவர்களுக்கு, ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால், ஏனோ! மாணவர்கள் தொழில் பயிற்சி படிப்புகளில் சேர்ந்து, தொடர்ந்து படிக்க ஆர்வம் காட்டுவதில்லை.
தரம் உயர்த்தப்பட்டுள்ளது
கோவை அரசினர் தொழில் பயிற்சி நிலையம், இந்திய அரசால் சிறந்த தொழில் பயிற்சி நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, மாதிரி ஐ.டி.ஐ., ஆக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், பயிற்சியாளர்களுக்கு நல்ல தரமான பயிற்சி வழங்க, 'ஸ்டிரைவ் ப்ராஜெக்ட் திட்டம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஐ.டி.ஐ.,யின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இங்கு எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு, பிட்டர், மிஷினிஸ்ட், ரெப்ரிஜிரேஷன் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், டர்னர், ஒயர் மேன் உள்ளிட்ட இரண்டு ஆண்டு தொழில் பிரிவுகளும், வெல்டர், சீட் மெட்டல் ஒர்க்கர், உணவு தயாரிப்பு, இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன் ஆகிய ஓராண்டு தொழில் பிரிவு பயிற்சிகளும், ட்ரோன் பைலட் ஆறு மாத கால தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இது தவிர, டாடா இண்டஸ்ட்ரீஸ், 4.0 திட்டத்தில், எலக்ட்ரிக் வாகன மெக்கானிக், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபாக்சரிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், லேப்டாப், மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், சீருடை, காலணிகள், மாதாந்திர உதவித் தொகையாக, 750 ரூபாய், மூவலூர் இராமாமிர்தம் திட்டத்தில் தகுதியான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உள்ளது. இவ்வளவு வசதிகள் அளிக்கப்பட்டாலும், அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் சேரும் மாணவர்கள் பலர், தொழில் படிப்புகளில் இருந்து பாதியிலேயே விலகிச் செல்லும் அவலம் நீடிக்கிறது.
பல நிறுவனங்களில் வேலை
இது குறித்து, கோவை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தினர் கூறியதாவது:
'கோவை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெற, 850 காலி இடங்கள் உள்ளன.
தொழில் பயிற்சி பெற சேரும் மாணவ, மாணவியரில், 40 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால், பாதியிலேயே தொழில் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து செல்கின்றனர். அதாவது டிராப் அவுட் ஆகி விடுகின்றனர்.
இதில், பலர் ஒயிட் காலர் ஜாப் எனப்படும் அலுவலகங்களில், 'ஏசி' அறைகளில் அமர்ந்து, சாதாரண வேலைகளில் ஈடுபட விருப்பப்பட்டு செல்வது தெரியவந்துள்ளது. இளம் வயதில் கஷ்டப்பட்டு தொழில் பயிற்சி பெற்றால், எதிர்காலத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புகழ்பெற்ற தொழில் முனைவோர்களாக வர முடியும் என்பதை, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். ஆனாலும், இந்த தேக்க நிலை தவிர்க்க முடியாமல் உள்ளது.
ஆண்டுதோறும் பயிற்சி முடித்தவர்களுக்கு வளாகத் தேர்வு நடத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், 18 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில், வேலை வாய்ப்பும் பெற்றுத் தருகிறோம். அப்படியிருந்தும் ஐ.டி.ஐ.யில் படிப்பதற்கு பலருக்கு ஆர்வமில்லை. முன்வருவதும் இல்லை.'
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.