/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு கலை கல்லுாரியில் 4,111 மாணவர்களுக்கு கல்வி
/
அரசு கலை கல்லுாரியில் 4,111 மாணவர்களுக்கு கல்வி
ADDED : ஜூலை 03, 2025 08:00 PM
ஊட்டி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், கல்லுாரி மின்னணுவியல் துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓம் முருகா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்தார்.
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பங்கேற்று பேசியதாவது:
ஊட்டியில் கடந்த, 1955-ம் ஆண்டு காமராஜர் தமிழகத்தில் முதல்வராக இருந்தபோது, கோடைக்கால தலைமை செயலகமாக செயல்பட்ட இந்த இடம், அரசு கலை கல்லுாரியாக மாற்றப்பட்டது.
மூன்று இளநிலை பாடப்பிரிவுகளுடன் துவக்கப்பட்ட இந்த கல்லுாரி நுாற்றாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் கடந்த, 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 3,618 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
ஆண்டு தோறும், 1,000 மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று செல்கின்றனர். 8 பாடப்பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு புதுமை பெண் திட்டத்தில், 431 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், 597 மாணவர்களும் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ், 2,599 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம் மூலமாக இந்த கல்லுாரியில், 4,111 மாணவர்களின் படிப்பிற்கு ஏற்றார் போல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை, 7 மாபெரும் தனியார் வேலை வாய்ப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில், 15,076 பேர் பங்கேற்றனர். 661 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், 3,382 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிதாக கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்று கொண்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.