/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
/
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
ADDED : ஜூலை 04, 2025 09:31 PM

ஊட்டி; 'நீலகிரியில் ஜூன் மாதம் நிலவரப்படி விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய, 4,494 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதமாக மழை பெய்து வருவதால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. எனினும், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, தோட்டத்தில் இலை பறிப்பதிலும், பராமரிப்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள காரணத்தால், மழை பொழிவுக்கு பின் தேயிலை தோட்டங்களில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு, 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் , சூப்பர் பாஸ்பேட்' உள்ளிட்ட உரங்களை தோட்டங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும், போதிய உரம் கிடைக்காததால், சில பகுதிகளில் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரம் இருப்பு விபரம்
மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் உர கடைகள் வாயிலாக விவசாயிகள் உரங்களை பெற்று வருகின்றனர். கடந்த மாத நிலவரப்படி, 'யூரியா -1392 மெட்ரிக் டன்; டி.ஏ.பி.,-- 297.95 மெட்ரிக்டன்; பொட்டாஷ் -647.35 மெட்ரிக் டன்; சூப்பர் பாஸ்பேட் -1042 மெட்ரிக் டன்; காம்பிளக்ஸ் -1114.6 மெட்ரிக் டன்,' என, 4494 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில், 'யூரியா -1037 மெட்ரிக் டன்; டி.ஏ.பி., -460 மெட்ரிக் டன்; பொட்டாஷ் -200 மெட்ரிக் டன்,' விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர கலப்புரங்கள், 700 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வினியோகம் குறித்து கண்காணிப்பு
இந்நிலையில், மாவட்டத்தில் உரம் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீதை கொடுக்க வேண்டும். உரங்கள் வாங்க வரும் விவசாயிகளை இணை பொருட்கள் வாங்க கட்டாய படுத்த கூடாது. உரங்களை விற்பனை செய்யும் போது உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி கூறுகையில்,''நீலகிரியில், 4,494 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி உரம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களுக்கு மாநில அளவிலான, 93634 40360 'வாட்ஸ்-ஆப்' எண்ணில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.