வனத்தீயை கட்டுப்படுத்த போராடும் வனத்துறை பணியில் 500 வன ஊழியர்கள்
வனத்தீயை கட்டுப்படுத்த போராடும் வனத்துறை பணியில் 500 வன ஊழியர்கள்
ADDED : ஏப் 26, 2026 07:57 PM

கூடலூர்: நீலகிரி வனக்கோட்டத்தில் தொடரும் வனத்தீயை, அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், நீலகிரி வனக்கோட்டம் பார்சன்ஸ்வேலி சரகத்துக்கு உட்பட்ட வென்லாக்டவுன், பைக்காரா வனப்பகுதியில் கடந்த 14ம் தேதி வனத்தீ ஏற்பட்டது. தொடரும் தீயை அணைக்கும் பணியில், மாநில முழுவதிலிருந்து வந்துள்ள, 500க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன், 7 வனத்தீ தடுப்பு வாகனங்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர் 2 குழுக்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், 5 குழுக்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் சூழல் மேம்பாட்டு குழுவினரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், 24ம் தேதி, அதிக வெப்பம், பலத்த காற்று, குறைந்த ஈரப்பதம் காரணமாக தீ வேகமாக பரவியது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து,
நேற்று முன்தினம், சூலூர் விமானப்படை விமானத்தளத்தில் இருந்து, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் இப்பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தவில்லை.
ஆனாலும், வன ஊழியர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடரும், வனத்தீயில், சுமார் 1000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது. இதனை சார்ந்து வாழும் பாம்பு, உடும்பு, பறவைகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது. உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது.
