/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருப்பூரிலிருந்து 9000 லி., கொள்முதல் பால் தட்டுப்பாடு! கறவை மாடு திட்டத்தை விரைவுப்படுத்த முயற்சி
/
திருப்பூரிலிருந்து 9000 லி., கொள்முதல் பால் தட்டுப்பாடு! கறவை மாடு திட்டத்தை விரைவுப்படுத்த முயற்சி
திருப்பூரிலிருந்து 9000 லி., கொள்முதல் பால் தட்டுப்பாடு! கறவை மாடு திட்டத்தை விரைவுப்படுத்த முயற்சி
திருப்பூரிலிருந்து 9000 லி., கொள்முதல் பால் தட்டுப்பாடு! கறவை மாடு திட்டத்தை விரைவுப்படுத்த முயற்சி
ADDED : மே 16, 2024 06:09 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பால் தட்டுப்பாட்டை போக்க, திருப்பூரிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை அந்தந்த சங்கத்திற்கு வினியோகிக்கின்றனர். பின், கூட்டுறவு சங்கத்திலிருந்து, ஊட்டி 'ஆவின்' நிர்வாகம் மொத்தமாக கொள்முதல் செய்கிறது.
அதில், பால் பாக்கெட்டுகள் மற்றும் நெய், வெண்ணெய், தயிர், பால்கோவா, பலவித நறுமணப்பால் உள்ளிட்ட உப பொருட்களை தயார் செய்து சந்தை படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டில் பருவமழை பொய்த்தது. நடப்பாண்டில் ஏப்., இறுதி வரை மழை பெய்யவில்லை. இதனால் ஏற்பட்ட கடும் வறட்சியால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, 30 சதவீதம் பால் கொள்முதல் குறைந்தது. பால் தட்டுப்பாட்டை போக்க ஆவின் நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
20,000 லி., தேவை
ஆவின் பொது மேலாளர் ஜெயராமன் கூறுகையில், ''நீலகிரியில், தினசரி பால் தேவை, 20 ஆயிரம் லிட்டராகும். 94 பால் கூட்டுறவு சங்க மூலம், 10,000 லி., பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கோவை ஆவின் மூலம் தினசரி, 10,000 லி., பால் வாங்கப்படுகிறது.
வறட்சி காலத்தை சமாளிக்க, திருப்பூர் ஆவின் மூலம், 9,000 லி., வீதம் மூன்று லோடு வாங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தீவன தட்டுப்பாடு நீங்கும் நிலை உருவாகி உள்ளது.
இதனால், திருப்பூரில் இருந்து இன்னும் இரண்டு லோடு பால் வாங்கிய பின், நிறுத்தப்படும். இங்குள்ள, 350 ஆவின் ஏஜென்டுகள் மற்றும் 79 ஆவின் பாலகங்களுக்கு வழக்கம்போல் பால் மற்றும் பால் உப பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
கால்நடைகளுக்கு மானிய விலையில் அடர் தீவனங்கள் வழங்கப்படுகிறது. ஆவின் நெய் தட்டுப்பாடு ஓரிரு நாளிலிருந்து சீராக கிடைக்கும்,'' என்றார்.
12,700 லி., கொள்முதல்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மூர்த்தி கூறுகையில், ''மாவட்டத்தில், 94 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. 2,445 பேர் உறுப்பினர்களாக இருந்து தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை அந்தந்த சங்கத்திற்கு வினியோகிக்கின்றனர்.
தற்போது, நாளொன்றுக்கு, 12,700 லி., பால் சங்க உறுப்பினர்களிடமிருந்து பெறப்படுகிறது. அதில், 5,700 லி., உள்ளூர் மக்கள் தேவைக்கு வினியோகிக்கப்படுகிறது. 7,000 லி., ஆவினுக்கு வினியோகித்து வருகிறோம். பால் உற்பத்தியை பெருக்க சங்க உறுப்பினர்களுக்கு வங்கி மூலம் கடனுதவியில் கறவை மாடுகள் வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.