/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் எடக்காட்டில் கூண்டில் சிக்கிய கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு

ADDED : ஜன 12, 2025 11:02 PM

ஊட்டி; மஞ்சூர் எடக்காடு அருகே வனத்துறை வைத்த கூண்டில் கரடி சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மஞ்சூர், குந்தா பகுதிகளில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் நடமாடி வந்த கரடி ஒன்று கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி வந்தது.
இந்நிலையில், மஞ்சூர் அருகே எடக்காடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சதீஷ்குமார்,32, என்பவர் கடந்த வாரம், தேயிலை தோட்டம் பகுதிக்கு சென்றபோது கரடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
'கரடியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்,' என, மக்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில், 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் கரடி நடமாட்டத்தை அறிய, 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வனத்துறை வைத்த கூண்டில் கரடி சிக்கியது.
தொடர்ந்து, குந்தா வனசரகர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கரடியை மீட்டு, முதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால், மஞ்சூர், குந்தா பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.