/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை கூட்டம்
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை கூட்டம்
ADDED : ஜூன் 21, 2025 06:28 AM

கோத்தகிரி : கோத்தகிரி அளக்கரை பகுதியில், தேயிலை தோட்டங்களில், குட்டிகளுடன் கூட்டமாக வரும் காட்டெருமைகளால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள், தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.
இதனால், விலங்கு--மனித மோதல் அதிகரித்து வருகிறது. தவிர, விவசாயம் சம்பந்தப்பட்ட தொழிலும், தொய்வு அடைந்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி, -குன்னுார் இடையே அமைந்துள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டங்களில், குட்டிகளுடன் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிப்பது உட்பட தோட்ட பணிகளை அச்சத்திற்கு இடையே, மேற்கொண்டு வருகின்றனர். காட்டெருமைகளின் நடமாட்டத்தால் பெரும்பாலான விவசாயிகள், தோட்ட பணிகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.