/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாயை பிரிந்த குட்டி யானைகள் பாகன்களுடன் சுற்றி வருவதால் 'குஷி'
/
தாயை பிரிந்த குட்டி யானைகள் பாகன்களுடன் சுற்றி வருவதால் 'குஷி'
தாயை பிரிந்த குட்டி யானைகள் பாகன்களுடன் சுற்றி வருவதால் 'குஷி'
தாயை பிரிந்த குட்டி யானைகள் பாகன்களுடன் சுற்றி வருவதால் 'குஷி'
UPDATED : மே 14, 2024 07:17 AM
ADDED : மே 14, 2024 12:06 AM

கூடலுார்;முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகள், நல்ல நிலைக்கு மாறி, சுறுசுறுப்பாக பாகன்களுடன் சுற்றி வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாம், தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரிப்பதில் ஆசியாவில் சிறப்பான இடத்தை பிடித்துஉள்ளது.
இந்த முகாமில் வளர்ந்த, தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டன.
'ஆஸ்கார்' விருது
அவற்றை பராமரித்து வந்த பழங்குடி பாகன் தம்பதி பொம்மன்; பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து, பெண் இயக்குனர் கார்த்திகி எடுத்த 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்,' என்ற ஆவண படத்துக்கு, 'ஆஸ்கார்' விருது கிடைத்தது.
படத்தில் இடம்பெற்ற யானை குட்டிகள், பாகன் தம்பதியை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் முதுமலைக்கு நேரடியாக வந்து பாராட்டி சென்றனர். இதன் மூலம் முதுமலை உலக புகழ் பெற்றுள்ளது.
தாயை பிரிந்தஇரு குட்டிகள்
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, மார்ச், 5ல் உயிரிழந்த யானையின் இரண்டு மாத பெண் குட்டி யானை, மார்ச், 9ம் தேதியும் முதுலைக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில், ஏப்., 6ம் தேதி, தாயை பிரிந்த ஆண் குட்டி யானை, ஏப்., 10ம் தேதி தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, தெப்பக்காடு முகாமில், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கராலில் இவைகள் தனித்தனியாக வைத்து பராமரிக்கும் பணி நடந்தது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாகன், உதவியாளர்கள், 5 பேர் அங்கேயே தங்கி, குழந்தையை போல் இரு குட்டி யானைகளை கவனித்து வருகின்றனர்.
நடைபயிற்சியின் போது 'குஷி'
இந்த குட்டி யானைகளுக்கு லாக்டோஜன், குளுக்கோஸ் கலந்த திரவ உணவு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. கரால் அருகே, மரத் தடுப்பு அமைத்து காலை, மாலை நேரத்தில் அவைகளுக்கு நடை பயிற்சி வழங்கி வருகின்றனர். அப்போது, இரு குட்டிகளும், ஒற்றுமையாக குஷியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் காட்சி, குழந்தை தனமான விளையாட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
முதுமலை துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ''முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவில் மிகவும் பழமையானது. இங்கு மாநில வனத்துறையின் சார்பில், தாயிடமிருந்து பிரிந்த மற்றும் தாயால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை, அழைத்து வந்து அதற்காக தனி ஊழியர்கள் நியமித்து பராமரித்து வருகிறோம்.
தற்போது, சத்தியமங்கலம் மற்றும் பெரியநாயக்கன் பாளையத்தில், தாய் யானையால் கைவிடப்பட்ட இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஐந்து ஊழியர்கள், அதன் அருகே இருந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கு நடை பயிற்சி வழங்குவதுடன், அதன் தேவைக்கேற்ப உணவுகள் வழங்கப்படுகிறது. தற்போது அவைகள் நல்ல நிலையில் சுறுசுறுப்பாக உள்ளது,'' என்றார்.

