/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுக்கடை அருகே தொல்லை! 'பார்' போல பயன்படுத்தப்படும் சாலையோர பகுதிகள்; தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி ரகளை
/
மதுக்கடை அருகே தொல்லை! 'பார்' போல பயன்படுத்தப்படும் சாலையோர பகுதிகள்; தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி ரகளை
மதுக்கடை அருகே தொல்லை! 'பார்' போல பயன்படுத்தப்படும் சாலையோர பகுதிகள்; தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி ரகளை
மதுக்கடை அருகே தொல்லை! 'பார்' போல பயன்படுத்தப்படும் சாலையோர பகுதிகள்; தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி ரகளை
ADDED : டிச 01, 2024 10:31 PM
ஊட்டி : ஊட்டி - மஞ்சூர் பிரதான சாலையில் உள்ள தேவர்சோலை டாஸ்மாக் மதுக்கடைக்கு குடிக்க வரும் மது பிரியர்களால், தொடரும் தொல்லையால் மக்கள் நொந்து போயுள்ளனர்.
ஊட்டி - மஞ்சூர் செல்லும் பிரதான சாலையில் லவ்டேல், நுந்தளா மட்டம், காத்தாடிமட்டம், தேவர்சோலை, கைக்காட்டி, பெங்கால்மட்டம், மஞ்சூர் வரை ஏராளமான கிராமங்கள் மற்றும் காலனிகள் உள்ளன.
இதன் வழியாக அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் என, நாள் தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில், தேவர்சோலை என்ற இடம் மையப்பகுதியாக உள்ளது. இங்கு சாலையை ஒட்டி டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நண்பகல், 12:00 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடை இரவு, 10:00 மணிக்கு மூடப்படுகிறது.
படையெடுக்கும் மது பிரியர்கள்
நண்பகல், 12:00 மணியிலிருந்து இப்பகுதியில் உள்ள மது பிரியர்களால், தேவர்சோலை பகுதி 'பிசி' யாகிவிடும். டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையில் இருப்புறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு, மது வகைகளை வாங்க பலர் முற்றுகையிடுகின்றனர்.
'பார்' வசதி இல்லாததால், ஏற்கனவே வாங்கி வந்த 'சைட் டிஸ்சுடன்' சாலையோரத்தில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மதுபோதை தலைக்கேறிய பலர் சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர்.
தொடரும் தொல்லையால் தாமதம்
மேலும் குறுகலான இந்த சாலையில் இருப்புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால், அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் ஒலி எழுப்பி அந்த குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்ல பெரும் பாடாக உள்ளது. இதனால், இங்கு அடிக்கடி ஏற்படும் வாய் தகராறால் காலதாமதம் ஏற்பட்டு, அரசு பஸ்களில் வரும் பயணியர், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.
சாலையோரம் மது அருந்தினால் நடவடிக்கை
மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஊட்டி ரூரல் போலீஸ், லவ்டேல் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், ''லவ்டேல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் ரோந்து செல்கின்றனர். ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு மது அருந்தி வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மதுக்கடை அருகே ரகளையில் ஈடுபடுபவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இனி தேவர்சோலை டாஸ்மாக் மதுக்கடை அருகே, சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துதல், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.