/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை விலை நிர்ணயம் பிரச்னையில் தீர்வு அவசியம்; மாநில அளவில் ரேஷன் கடை விற்பனையில் சுணக்கம் ஏன்?
/
தேயிலை விலை நிர்ணயம் பிரச்னையில் தீர்வு அவசியம்; மாநில அளவில் ரேஷன் கடை விற்பனையில் சுணக்கம் ஏன்?
தேயிலை விலை நிர்ணயம் பிரச்னையில் தீர்வு அவசியம்; மாநில அளவில் ரேஷன் கடை விற்பனையில் சுணக்கம் ஏன்?
தேயிலை விலை நிர்ணயம் பிரச்னையில் தீர்வு அவசியம்; மாநில அளவில் ரேஷன் கடை விற்பனையில் சுணக்கம் ஏன்?
ADDED : ஏப் 04, 2025 10:50 PM

நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில், முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை தொழிலில், 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, 16 கூட்டுறவு தேயிலைகள், 47 பெரிய கம்பெனிகள் உட்பட, 235 தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில், குன்னுார், கொச்சி, கோவை உள்ளிட்ட மையங்களில் தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது.
ஒரு கிலோ தேயிலை துாள் தயாரிக்க, 4 கிலோ பசுந்தேயிலை தேவைப்படும் நிலையில், கடந்த பல ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காமல் சிறு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். 2022ல் தோட்டக்கலை துறை நடத்திய ஆய்வில், ஒரு கிலோ பசுந்தேயிலை உற்பத்தி செலவு, 22.30 ரூபாய் என கணக்கிடப்பட்டது. தற்போது, 25 வரை உற்பத்தி செலவாகிறது. ஆனால், இதைவிட குறைவான தொகை, விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை. தேயிலை வாரியம் அறிவிக்கும் பசுந்தேயிலைக்கான நிர்ணய விலையை, பல தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை.
கிடைக்காத நிலுவை தொகை
குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில்,
''குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட, 8 கூட்டுறவு தொழிற்சாலைகளில், கடந்த அக்., மாத விலையான, 24.59 ரூபாய் வழங்காமல் குறைத்து வழங்கப்பட்டது. இதுவரை, இதற்கான நிலுவை தொகை, 1.40 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை.
இதற்கு தீர்வு காணும் வகையில், தேயிலைக்கு உற்பத்தி செலவுடன் கூடிய ஆதார விலை நிர்ணயம் செய்வதுடன், ஊட்டி டீ ரேஷன் கடைகளில் விற்றதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ரூ.40 விலை நிர்ணயம் அவசியம்
நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''மலை மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் சாகுபடி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவிற்கு, 40 ரூபாய் நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு, தேயிலை வாரியம் அறிவிக்கும் மாதாந்திர விலைக்கு குறையாமல் வழங்க, 'இன்கோ சர்வ்' மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.