/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெயரளவுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்
/
பெயரளவுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 07, 2025 08:10 PM
பந்தலுார்; மாநில அரசின் சார்பில், தொல் பழங்குடியினருக்கான, சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு பழங்குடியின கிராமங்களிலும் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில் அனைத்து விதமான சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டைகள் விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், பழங்குடியினர் கிராமங்களை ஒட்டி அரசு பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் 'நெட்வொர்க்' சேவை இல்லாததால், ஆதார் அட்டைகள் பதிவேற்றம் செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், முகாமுக்கு செல்லும் பழங்குடியின பயனாளிகள், ஏமாற்றத்துடன் திரும்பி வருவது அதிகரித்து வருகிறது.
பழங்குடியின மக்கள் கூறுகையில், 'தினசரி கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசு அறிவிக்கும் இது போன்ற முகாம்களில், எங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்லும் நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பி வருவதால் ஒருநாள் கூலியும் வீணாகி வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில், 'நெட்வொர்க்' இல்லாத பகுதிகளில் நடக்கும் இது போன்ற அரசு முகாம்களுக்கு பழங்குடியின மக்கள் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம். இதனை தடுக்க முன் ஏற்பாடுகளுடன் முகாம்களை நடந்த வேண்டும்,' என்றனர்.