/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு மாநில சாலை நடுவே திடீரென ஏற்பட்ட குழி; போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
/
இரு மாநில சாலை நடுவே திடீரென ஏற்பட்ட குழி; போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
இரு மாநில சாலை நடுவே திடீரென ஏற்பட்ட குழி; போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
இரு மாநில சாலை நடுவே திடீரென ஏற்பட்ட குழி; போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
ADDED : ஜூலை 24, 2025 08:14 PM

கூடலுார்; தமிழக- கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி அருகே, சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட குழியால், மூன்று மாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து பிரிந்து செல்லும், கோழிக்கோடு சாலை, தமிழக - கேரளா, -கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். கேரளாவில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களுக்கு, வருவாய் துறையினர், நாடுகாணியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் நாடுகாணியிலிருந்து மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை பல இடங்களில், சேதமடைந்துள்ளது. அப்பகுதியை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
தற்போது பெய்து வரும் பருவமழையில், சாலை மேலும், சேதமடைந்து வருகிறது. வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில், சேதமடைந்துள்ள, 4 கி.மீ., சாலையை சீரமைக்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். 'இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கீழ்நாடுகாணி அண்ணா நகர் அருகே நேற்று முன்தினம் மாலை, சாலை நடுவே திடீரென குழி ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சமடைந்துள்ள கனரக வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வாகனங்கள் அப்பகுதியை சிரமப்பட்டு கடந்து சென்றன.
சாலை நடுவே ஏற்பட்ட குழி மேலும் சேதமடைந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளதால், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்பகுதி ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதியில் சாலையில், மழை நீர், கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு நடுவே சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், சாலை மற்றும் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என, கூறினர்.

