/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை பிடிக்கும் கூண்டில் வேட்டை புலிக்கு வலை
/
யானை பிடிக்கும் கூண்டில் வேட்டை புலிக்கு வலை
ADDED : ஆக 26, 2025 11:33 PM

கூடலுார்; தேவர்சோலை பகுதியில் உலா வரும் புலியை பிடிக்க, கேரளாவில் யானையை பிடிக்கும் கூண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பாடந்துறை சுற்றுவட்டார பகுதியில், உலா வரும், 3 வயது ஆண் புலி கடந்த சில மாதங்களில், 20 மாடுகளை தாக்கி கொன்றது.
இந்த புலி மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதால், இதனை பிடிக்கும் பணியில், 8ம் தேதி முதல், 40 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அப்பகுதியில், 4 கூண்டுகள், 55 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், முதுமலையிலிருந்து, கும்கி யானைகள் வசீம், விஜய் அழைத்து வரப்பட்டுள்ளது. எனினும் புலி அகப்படவில்லை.
இந்நிலையில், புலியை பிடிக்க, கேரளா மாநிலம் நிலம்பூர் வனத்துறைக்கு சொந்தமான, 30 அடி நீளம், 15 அடி உயரம், 10 அடி அகலத்திலான பெரிய கூண்டு நேற்று கொண்டு வரப்பட்டு, கொட்டாய் மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதியில்லை.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் ஏற்கனவே, 4 கூண்டுகள் வைத்தும் புலி பிடிபடவில்லை. இதனால், கேரளாவில் இருந்து யானையை பிடிக்கும் அளவுக்கு உரு வாக்கப்பட்ட, பெரிய கூண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், இரவில் ஆடு கட்டப்பட்டு, புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

