/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயனற்று கிடக்கும் வாட்டர் ஏ.டி.எம்.,
/
பயனற்று கிடக்கும் வாட்டர் ஏ.டி.எம்.,
ADDED : ஜன 16, 2025 04:25 AM

ஊட்டி : ஊட்டியில் பெரும்பாலான பகுதிகளில் வாட்டர் ஏ.டி.எம்., பயனற்று கிடப்பதால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, மட்காத 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வீசும் தண்ணீர் பாட்டில்களால், நிலம் மாசுபடுவதுடன், வன விலங்குகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மாவட்டத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மாறாக, மாவட்டம் முழுவதும், முக்கியமான பகுதிகளில், 45 வாட்டர் ஏ.டி.எம்., கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிகள் அதிகம் கூடும் ஊட்டி பகுதியில், 20க்கும் மேற்பட்ட வாட்டர் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட வாட்டர் ஏ.டி.எம்., கள் தற்போது பல்வேறு பகுதிகளில், பராமரிப்பு இல்லாமல் பயனற்று காணப்படுகின்றன. குறிப்பாக, ஊட்டி மார்க்கெட், டவுன் பஸ் ஸ்டாண்ட், தலைகுந்தா உட்பட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்., பல மாதங்களாக பயனற்று கிடைக்கிறது. பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பயணிகள், தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு செல்வது வழக்கம்.
மக்கள் அதிக அளவில் கூடும் இப்பகுதியின் அருகே உள்ள வாட்டர் ஏ.டி.எம்., பயனில்லாமல் உள்ளதால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, சுற்றுலா மையங்கள் உட்பட, அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.பி.எம்.,களை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம்.

