/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெற் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டு யானை
/
நெற் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டு யானை
ADDED : நவ 07, 2024 11:08 PM

கூடலுார் ; கூடலுார் குணில் வயல் பகுதியில், நுழைந்த காட்டு யானை, நெற் பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில், நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட பருவ மழை பெய்ததால், நெல் விவசாயிகள், ஆடி மாதத்தில் நெல் விதை விதைத்து, நாற்று நடவு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, நெற்பயிர்களில் கதிர் விட துவங்கியுள்ளது.
இந்நிலையில், தொரப்பள்ளி அருகே உள்ள, குணில் பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வயல் பகுதிகளில் நுழைந்து, உணவுக்காக நெற் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் அவைகளை விரட்டினாலும், யானைகளை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இரவு நேரங்களில், காட்டு யானைகள் தொடர்ந்து வயல்களில் நுழைந்து, நெற்பயிரை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் அவ்வப்போது அவைகளை விரட்டினாலும், நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது, நெற் கதிர்கள் பூத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய உள்ள நிலையில், நாள்தோறும் காட்டு யானைகள் வந்து சேதப்படுத்தி வருவதால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நெல் அறுவடை முடியும் வரை, காட்டு யானைகள் வயலுக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.