/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பழங்குடிகள்
/
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பழங்குடிகள்
ADDED : பிப் 18, 2025 09:43 PM

பந்தலுார் ; பந்தலுார் அருகே பைங்கால் பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பகுதியில் பைங்கால் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு பணியர் மற்றும் குரும்பர் சமுதாய பழங்குடியின மக்கள், 30 வீடுகளில் வசித்து வருகின்றனர். அதில் ஒரு சிலருக்கு மட்டும், ஊராட்சி மூலம் தொகுப்பு வீடு கட்டி தரப்பட்டு உள்ளது.
அந்த வீடுகளும் விரிசல் அடைந்து மழை காலங்களில், குடியிருக்க முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பாழடைந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த, 2006 ம் ஆண்டு கட்டி தரப்பட்ட இந்த வீடுகளில் மேற்கூரைகள், உடைந்து, சுவர்கள் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இந்த வீடுகளை இடித்து புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி தர, பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
நீலகிரியில், 100 சதவீதம் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமல், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வரும் அவலமும் தொடர்கிறது.
கிராமத்தின் மையத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், குடிநீருக்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாழடைந்த குடியிருப்புகளில், பயத்துடன் வாழ்ந்து வருவதுடன், கழிப்பிட வசதி இல்லாமலும் சிரமப்படும் இந்த பழங்குடியின மக்களை, அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்ள வில்லை.
இங்குள்ள மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தரமான தொகுப்பு வீடுகள் மற்றும் மக்கள் பயன்படுத்த ஏதுவான கழிவறைகள் அமைத்து தருவதுடன், குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்,' என்றனர்.