/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தலைமறைவு கொள்ளையன் மைசூரில் சுற்றிவளைப்பு
/
தலைமறைவு கொள்ளையன் மைசூரில் சுற்றிவளைப்பு
ADDED : நவ 04, 2025 08:51 PM
பந்தலூர்: வியாபாரி மனைவியிடம் நகைகளை பறித்து தலைமறைவான கொள்ளையனை போலீசார் மைசூரில் கைது செய்தனர்.
பந்தலூர் அருகே, சேரம்பாடி பகுதியில் கடை நடத்தி வருபவர் ஆலி. இவரிடம் அக்., 30ம் தேதி போலீஸ் என அறிமுகமான இரண்டு பேர், போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதாக கூறி மிரட்டி உள்ளனர். வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, எங்களால் முடியும் என கூறிய இவர்களை, ஆலி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஆலியை தாக்கிய இவர்கள், மனைவியிடம் இரண்டரை சவரன் நகையை வாங்கிச் சென்றுள்ளனர். ஆலி சேரம்பாடி போலீசாரிடம் விசாரித்ததில், வந்தவர்கள் போலி ஆசாமிகள் என்பது தெரியவந்தது.
சேரம்பாடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சுல்தான் பத்தேரியை சேர்ந்த கார் டிரைவர் அப்துல் ரசாக்கை கைது செய்து விசாரித்தனர்.
கொள்ளையனின் மொபைல் நம்பரை வைத்து போலீசார் விசாரணை செய்து. நேற்று முன்தினம் வேறு ஒரு வழக்கில் மதுரை போலீசார் கொள்ளையன் பகவதி ராஜை மைசூரில் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கொள்ளையன் பகவதிராஜ் மீது, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், கொள்ளை, போக்சோ, மற்றும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட பகவதி ராஜை விரைவில் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு, நீலகிரியில் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

