/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அஞ்சலகங்களில் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு
/
அஞ்சலகங்களில் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு
ADDED : செப் 30, 2024 10:57 PM
கோத்தகிரி : அஞ்சலக காப்பீடு திட்டத்தில் சேர பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், 'இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ்' வங்கி, புது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு, 520, 559 மற்றும் 759 ரூபாய் பிரீமியத்தில், 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானிய மக்களுக்கும், விபத்து காப்பீடு திட்டங்களின் பயன்கள் சென்றடையும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த காப்பீட்டு திட்டத்தில், 18 முதல், 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள அட்டை, முகவரி சான்றிதழ் போன்ற எந்தவித காகித பயன்பாடு இல்லாமல், தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட் போன் மற்றும் 'பயோமெட்ரிக்' சாதனம் பயன்படுத்தி, வெறும் ஐந்து நிமிடங்களில், முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, முழு ஊனம், பகுதி ஊனம், ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு உள்ளிட்ட, சிறப்பு அம்சங்களுடன் செயல்படுத்தப்படும் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, குடும்பத்தின் எதிர் காலத்தை உறுதி செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.