முழுமை பெறாத தடுப்பு சுவர் சாலையில் விபத்து அபாயம்
முழுமை பெறாத தடுப்பு சுவர் சாலையில் விபத்து அபாயம்
ADDED : அக் 01, 2026 08:33 AM

கோத்தகிரி: கோத்தகிரி-ஊட்டி சாலையில், முழுமை பெறாத தடுப்பு சுவரால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சமவெளி பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கொண்டை ஊசி வளைவு குறைந்த, கோத்தகிரி சாலை வழியாக வந்து செல்வதை விரும்புகின்றனர். இதனால், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தவிர, உள்ளூர் அரசு பஸ்கள் உட்பட, இதர வாகனங்களின் இயக்கமும் இந்த சாலையில் அதிகமாக உள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த சாலை விரிவுபடுத்தப்பட்டு, தேவையான இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டபெட்டு - கார்ஸ்வுட் வளைவு பகுதியில், தடுப்புச் சுவர் அமைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் விடுபட்ட பகுதியில், முழுமையாக தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
